தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 181ஆவது தலமும், சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 64ஆவது சிவத்தலமாகும்.
இறைவன்:சிவானந்தேஸ்வரர், பிரணவேஸ்வரர்.
இறைவி: மங்களாம்பிகை, மலையரசி.
பிரணவ மந்திரத்திற்கு பொருள் தெரியாத பிரம்மாவை முருகப் பெருமான் சிறையில் அடைத்து விட்டார். இதனைக் கண்டித்த சிவனிடம், பிரணவ மந்திரத்தின் பொருள் தெரிந்த பின் பிரம்மா படைப்பு தொழிலை தொடங்கட்டும் எனக்கூறினார். அப்படியானால் நீ முதலில் எனக்கு அர்த்தம் கூறு என சிவன் கூறவே, முருகன் ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருள் உரைத்தார். தந்தைக்கு உபதேசம் செய்ததாலும், பிரம்மாவை சிறையிலடைத்ததாலும் ஏற்பட்ட மனக்கவலை நீங்க மகாவிஷ்ணுவிடம் பரிகாரம் கேட்டார். தன்னை பூஜிப்பவர்களின் அனைத்து அபசாரங்களையும் மன்னித்து அருளும் கருணையுள்ளம் படைத்த சிவபெருமானை லிங்க உருவில் வழிபடும்படி மகாவிஷ்ணு முருகனுக்கு அறிவுரை கூறினார். அதன்படி முருகர் திருப்பனந்தாள் அருகிலுள்ள சேங்கனூரில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். ஆனால் அவர் கவலை தீரவில்லை. மேலும் கவலைகள் கூடி மெளனியாகவே ஆகி ஊமையாய் சஞ்சரிக்கத் தொடங்கினார். அவ்வாறு இருக்கையில் ஒரு நாள் காவிரியின் கிளைநதியான அரிசொல் ஆறு எனப்படும் அரிசிலாற்றின் கரையோரம் இருந்த திருப்பந்துறை தலத்தை அடைந்தார். அங்கு வன்னி மரத்தடியில் குடி கொண்டிருக்கும் சிவானந்தேஸ்வரரைக் கண்டதும் முருகப்பெருமானது உள்ளம் மலர்ச்சி அடைந்தது. உள்ளம் நெகிழ்ந்து அதுவரை மெளனியாக இருந்த முருகர் சிவானந்தேஸ்வரரை தலையில் குடுமியோடும் கையில் சின் முத்திரையோடும் தண்டாயுதபாணியாக மாறி விதிப்படி பூஜித்தார். அவர் பூஜையில் மனம் மகிழ்ந்த சிவபெருமான் முருகனை வாஞ்சையோடு நோக்க அதுவரை மெளனமாய் இருந்த முருகர் மகிழ்வடைந்தார்.
பைம்மா நாகம் பன்மலர் கொன்றை பன்றிவெண் கொம்பு ஒன்று பூண்டு செம்மாந்து ஐயம்பெய்க என்று சொல்லிச் செய்தொழில் பேணியோர் செல்வர் அம்மான் நோக்கிய அந்தளிர்மேனி அரிவையோர் பாகம் அமர்ந்த பெம்மானல்கிய தொல்புகழாளர் பேணு பெருந்துறையாரே.
- திருஞானசம்பந்தர்
கருத்துகள்