158. திருநறையூர்ச்சித்தீச்சரம் (திருநறையூர்)

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில்  182ஆவது தலமும், சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 65ஆவது சிவத்தலமாகும்.

இறைவன்:சித்தநாதேஸ்வரர், வேதேஸ்வரர், நரேஸ்வரர்.

இறைவி: அழகம்மை, சௌந்தர நாயகி.






இத்தலத்து ஊரின் பெயர் திருநறையூர். ஆலயத்தின் பெயர் சித்தீச்சரம்.  கோரக்க சித்தர் என்பவர் தனக்கு ஏற்பட்ட தோல் வியாதி நீங்க இத்தலத்தில் இறைவனை வழிபட்டார். இறைவன் அவருக்கு அருள் புரிய, சித்தர் தனது நோய் நீங்கப் பெற்றார். சித்தருக்கு அருளியதால் இறைவன் பெயர் சித்தநாதேஸ்வரர் என்றும் ஆலயம் சித்தீச்சரம் என்றும் வழங்குகிறது.  

நரன், நாராயணர் என்ற இருவர் இத்தலத்தில் தவமியற்றி வந்தனர். தவவாழ்க்கையில் ஈடுபட்டிருந்த அவர்களின் தவத்திற்கு இடையூறு செய்தான் அசுரன் ஒருவன். எளிதில் வென்றுவிட முடியாத அந்த அசுரனை வெல்ல நாரத மகரிஷியிடமிருந்தும், சூரிய பகவானிடமிருந்தும் ஆலோசனைப் பெற்று, அதன்படி அசுரனின் கவச குண்டலங்களை யாசித்துப் பெற்றுக் கொண்டு, அசுரனை போர் புரிந்து கொன்றனர். அந்த பாவத்தைப் போக்கிக் கொள்ள இத்தலத்தில் சித்தநாதரை வழிபட்டு அவரருள் பெற சிவநிஷ்டையில் ஆழ்ந்திருந்தனர். தியானத்தில் இருந்த இவர்கள் ஆசிரமத்திற்கு வருகை தந்த துர்வாசரை கவனிக்கவில்லை. கோபம் கொண்ட துர்வாசர் அவர்கள் இருவரையும் பறவைகளாகப் போகும்படி சபித்துவிட்டார். நாரையாகப் பிறந்த நாராயணர் காவிரி வடகரைத் தலமான திருநாரையூரில் இறைனை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றார். நரனோ, நரையான் என்ற பறவையாகப் பிறந்து, இத்தல சித்தீச்சரப் பெருமானை வழிபட்டு தன் பழைய வடிவம் பெற்றார். நர, நாராயணர் சிவ வழிபாடு செய்யும் புடைப்புச் சிற்பம் இவ்வாலயத்தில் இருக்கக் காணலாம்.
ஊர்உ லாவு பலிகொண்டு உலகேத்த
நீர்உ லாவு நிமிர்புன் சடை அண்ணல்
சீர்உ லாவு மறையோர் நறையூரில்
சேரும் சித்தீச் சரம்சென்று அடை நெஞ்சே.
- திருஞானசம்பந்தர்

நீரும் மலரும் நிலவும் சடைமேல்
ஊரும் அரவும் உடையான் இடமாம்
வாரும் அருவி மணிபொன் கொழித்துச்
சேரும் நறையூர்ச் சித்தீச் சரமே.
- சுந்தரர்

கருத்துகள்