தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 149 ஆவது தலமும், சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 32 ஆவது சிவத்தலமாகும்.
இறைவன்: வில்வாரண்யேசுவரர்,பிரமநாயகர், நீலகண்டேஸ்வரர், தைலாப்பியங்கேசர், காமதேனுபுரீஸ்வரர்.
இறைவி: அநூபமஸ்தனி (திருமணக்கோலம்),பக்தாபீஷ்டதாயினி (தவக்கோலம்).
மிருகண்டு முனிவர், அவரின் மனைவி புத்திரப் பேறு வேண்டி இறைவனை வழிபட்டு வந்தனர். அவர்கள் பக்திக்கு மெச்சி இறைவன் அவர்கள் முன் தோன்றி ஆயிரம் ஆண்டுகள் வாழும் துர்க்குணங்கள் நிறைந்த மகன் வேண்டுமா அல்லது 16 வயது வரை மட்டும் வாழும் தலைசிறந்த மகன் வேண்டுமா என்று கேட்க மிருகண்டு தமபதியினர் 16 வயது மகனே வேண்டும் என்று வரம் கேட்டனர். மிருகண்டு தம்பதியருக்கு இறைவன் அருளால் பிறந்த மார்க்கண்டேயர் சிறந்த சிவபக்தராக விளங்கினார். அவருக்கு 16 வயது நடக்கும் போது அவரின் பெற்றோர் இறைவன் கூறியபடி விதிக்கப்பட்ட ஆயுள் 16 வயது தான் என்பதை மார்க்கண்டேயருக்கு கூறினர். சிவபெருமானே அவரின் ஆயுளைக் காக்க முடியும் என்று மார்க்கண்டேயர் தனது ஆயுள் விருத்திக்காக காசியில் உள்ள ஈசனை வழிபட்டார். அப்பொழுது சிவபெருமான் அவரை தென்னாடு சென்று தவம் செய்யும் படி உத்தரவிட, மார்கண்டேயரும் திருநீலக்குடி தலத்திற்கும் வந்து ஈசனை வழிபட்டார். ஒரு சிவராத்திரியில் அவர் சிவனை வழிபட்டு கொண்டிருந்தபொழுது, அவரின் ஆயுளைப் பறிக்க யமதர்மன் தனது பாசக் கயிற்றை வீச, மார்க்கண்டேயர் சிவலிங்கத்தை இறுக்கி பற்றிக் கொண்டார். யமன் வீசிய பாசக் கயிறு சிவலிங்கத்தையும் பற்றி இழுத்தது. அப்பொழுது இறைவன் தோன்றி, யமனை தனது காலால் எட்டி உதைக்கிறார். பிறகு அவர் மார்க்கண்டேயரிடம் உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்கிறார். மார்க்கண்டேயர் தமது விருப்பத்தை சொன்னவுடன் அதுபடியே மார்க்கண்டேயருக்கு இத்தலத்தில் சிரஞ்சீவியாக இருக்க ஈசன் வரம் அளித்தார். அத்தகைய சிறப்பு பெற்ற தலம் திருநீலக்குடி.
பாற்கடலை அமிர்தம் பெற வேண்டி தேவர்களும், அசுரர்களும் கடைந்த போது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை சிவபெருமான் உண்டார். அது அவர் வநிற்றுக்குள் செல்லாமல் தடுக்க உமை அவரின் கழுத்தைப் பிடிக்க விஷம் அவர் கழுத்தில் தங்கியது. இறைவனும் நீலகண்டேஸ்வரர் என்று பெயர் பெற்றார்.
வைத்த மாடும் மனைவியும் மக்கள்நீர் செத்த போது செறியார் பிரிவதே நித்த நீலக்குடியர னைந்நினை சித்த மாகிற் சிவகதி சேர்திரே.
- திருநாவுக்கரசர்
கருத்துகள்