162. திருநாகேச்சுரம் (திருநாகேஸ்வரம்)

 தேவாரப் பாடல் பெற்ற தலங்களில்  146 ஆவது தலமும், சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 29 ஆவது சிவத்தலமாகும். 

இறைவன்:  நாகேஸ்வரர், நாகநாதர், சண்பகாரண்யேஸ்வரர்.

இறைவி:  கிரிகுஜாம்பிகை, குன்றமாமுலையம்மை.




இந்த தலம் முன்பு சென்பகமரங்கள் நிறைந்த இடமாதலால் இது சென்பகதலம் என்றும் அழைக்கபட்டது, அதனால் அந்த சிவனுக்கு சென்பகராணேஸ்வரர் எனவும் பெயர் உண்டு.  இப்போது மக்கள் வழக்கில் திருநாகேஸ்வரம் என்று வழங்கப்படுகிறது.  

ஒன்பது நாகங்களில் (வாசுகி, ஆதிசேஷன், கார்க்கோடகன், அனந்தன், குளிகன், தட்சகன். சங்கபாலன், பதுமன்) முக்கிய நாகமான தட்சகன் வந்து வழிபட்ட இடம்.  சுசீல என்றொரு முனிவர் இருந்தார் அவருக்கு சுகர்மன் என்றொரு மகன் இருந்தான், அவனை தன் எதிரி என நினைந்து அந்த தட்சகன் எனும் நாகம் கடித்துவிட்டது. இதை அறிந்த சுசீல முனிவர் தட்சகனை பூமியில் மனிதனாக மாற சாபமிட்டார், அதை கண்டு அஞ்சிய தட்சகன் காசிப முனிவரிடம் சரணடைந்தான். காசிப முனிவர் கண்களை மூடி தியானித்தார். என்ன பாவம் செய்தாலும் சிவனிடம் சென்றால் மன்னிப்பு உண்டு, முனிவர் சாபபடி நீ பூமியில் பிறந்து சிரமபட வேண்டும், அதற்கு முன்பே பூலோகம் சென்று சிவலிங்கம் ஒன்றை செய்து சிவனை வழிபட்டால் உன் சாபம் தீரும் என ஆலோசனை சொன்னார். அதன்படி தட்சகன் தன் பரிவார நாகங்களோடு வந்து வழிபட்ட இடம் இந்த திருநாகேஸ்வரம்.

சிவபெருமானை மட்டுமே வணங்கி வந்த பிருங்கி முனிவரைக் கண்டு வெகுண்ட பார்வதி தேவி, இறைவனைக் குறித்து அர்த்தநாரீசுர வடிவம் வேண்டி இத்தலத்தில் சண்பக மரத்தடியில் கடுந்தவம் புரிந்தார்.  

கேரள நாட்டு மன்னனாக விளங்கிய சம்புமாலி என்பவன் பொன்னால் பல் அறங்கள் செய்து வந்தான். ஒருநாள் காலாங்கிரி முனிவர் அவனிடம் சென்றபோது, அதற்கு முதல்நாளே அவன் அறத்தை முடித்துவிட்டானாதலால் அவனால் அம்முனிவருக்குப் பயன் கிட்டவில்லை. வெகுண்ட முனிவர், அவனை 'அலகையுரு பெற்று அலைக'' எனச் சாபமிட்டார். பதைத்த மன்னன் பலவாறாகப் புலம்பி முனிவரிடம் கழுவாய் வேண்டினான்.  சற்றே மனமிரங்கிய முனிவரும், அவ்வலகையுருவுடன் அவன் ஆயிரத்தெட்டு, சிவத்தலங்களையும் கண்டு வணங்கி இறுதியில் சண்பகவனம், என்னும் திருநாகேச்சரத்திற்கு வந்து சூரிய புட்கரணியில் நீராடி, ஸ்ரீநாகநாதப்பெருமானையும், குன்று மாமுலையம்மையையும் வணங்கிச் சாப நீக்கம் பெறுமாறு கழுவாய் கூறினார். அவ்வாறே சம்புமாலிமன்னனும் அலகையுருவுடன் எங்கும் அலைந்து இறுதியில் இத்தலத்துச் சூரிய புட்கரணியில் நீராடி வணங்கி விமோசனம் பெற்றான்.  
பொன்னேர் தரு மேனியனே புரியும்
மின்னேர் சடையாய் விரை காவிரியின்
நன்னீர் வயல் நாகேச்சர நகரின்
மன்னே என வல்வினை மாய்ந்து அறுமே.
- திருஞானசம்பந்தர்
நல்லர் நல்லதோர் நாகங் கொண்டாடுவார்
வல்லர் வல்வினை தீர்க்கு மருந்துகள்
பல்லிலோடு கையேந்திப் பலிதிரி
செல்வர் போற்றிரு நாகேச்சரவரே.
- திருநாவுக்கரசர்
பாலனது ஆருயிர் பரியாது பகைத்தெழுந்த
காலனை வீடுவித்துக் கருத்தாக்கியது என்னை கொலாம்
கோலமலர்க் குவளை கழுநீர் வயல்சூழ் கிடங்கில்
சேலொடு வாளைகள் பாய் திருநாகேச் சரத்தரனே.
- சுந்தரர்

கருத்துகள்