163. வைகல்மாடக்கோயில்

 தேவாரப் பாடல் பெற்ற தலங்களில்  150 ஆவது தலமும், சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 33 ஆவது சிவத்தலமாகும். 

இறைவன்:  வைகல் நாதர், சண்பகாரண்யேஸ்வரர்.

இறைவி:  கொம்பியல்கோதை, வைகல் நாயகி.

கோச்செங்கட் சோழன் முற்பிறவியில் சிலந்தியாய் இருந்து திருவானைக்கா இறைவனுக்கு வலைப்பந்தல் அமைத்து வழிபட்டு இறைவன் அருளால் சோழ நாட்டின் பேரரசனாக பிறக்கும் பேறு பெற்றான். முற்பிறவியில் தான் சிலந்தியாக இருந்து செய்த சிவத்தொண்டிற்கு யானை இடையூறாக இருந்த காரணத்தினால் யானை ஏறாத மாடக் கோவில்களைக் கட்டினான். இத்தலத்தில் உள்ள ஆலயம் கோச்செங்கட் சோழன் கட்டிய அத்தகைய மாடக் கோவில்களுள் ஒன்றாகும்.






முன்னொரு காலத்தில் பூமாதேவி தன்னை விரும்பி மணம் செய்து கொள்ளுமாறு திருமாலை வேண்ட, திருமாலும் அதற்கு இசைந்து நிலமகளான பூமாதேவியை மணம் புரிந்து கொண்டார். திருமால் மேல் கோபம் கொண்ட திருமகள் சணபகவனமாகிய இத்தலம் வந்து சிவபெருமானை கடுந்தவம் புரிந்து வழிபட்டாள். திருமாலும், பூமாதேவியும் பிரிந்து சென்ற திருமகளை அடையும் பொருட்டு இத்தலம் வந்து அவர்களும் சிவபெருமானை வழிபட்டனர். திருமாலைத் தேடி வந்த பிரம்மாவும் இத்தலம் வந்து சிவபெருமானை வழிபட்டார். சிவபெருமான் திருவருளால் திருமால் திருமகளை அடையும் பேறு பெற்றார். 
துளமதியுடைமறி தோன்று கையினர்
இளமதி யணிசடை எந்தை யாரிடம்
உளமதியுடையவர் வைகல் ஓங்கிய
வளமதி தடவிய மாடக்கோயிலே.
- திருஞானசம்பந்தர்

கருத்துகள்