தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 152 ஆவது தலமும், சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 35 ஆவது சிவத்தலமாகும்.
இறைவன்: கோகிலேஸ்வரர், கோழம்பநாதர்.
இறைவி: சௌந்தர நாயகி.
சிவனும் மகாவிஷ்ணுவும் பார்வதியை நடுவராக வைத்து சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்த போது ஆட்டத்தில் காய் உருட்டியதில் சந்தேகம் வர பார்வதியிடம் கேட்கிறார் சிவன். பார்வதி மகாவிஷ்ணுவிற்கு சாதகமான பதிலை கூறியதால் சிவபெருமான் பார்வதியை பசுவாக பூமியில் பிறக்கும் படி சாபம் இடுகிறார். இப்படி பசுவாக பிறந்த பார்வதி பூவுலகில் பல இடங்களில் இறைவனை பூஜித்தாள். அவைகளில் இத்தலமும் ஒன்றாகும்.
சந்தன் என்னும் வித்யாதரன் தேவேந்திரனின் சாபத்தினால் குயிலாக மாறினான். சாபம் நீங்க இத்தலம் வந்து பல்லாண்டு காலம் பூஜித்து, சாபம் நீங்கி சுய உருவை அடைந்தான். குயில் (கோகில) வடிவத்துடன் வந்து பக்தன் பூஜித்ததால் இப்பெருமான் கோகிலேசுவரர் என அழைக்கப்பட்டார். இந்திரன் கவுதமரின் சாபம் நீங்க பல காலம் இங்கு சிவனை பூஜித்து சாபம் நீங்கப் பெற்றான்.
நீற்றானை நீள்சடைமேல் நிறைவுள்ளதோர் ஆற்றானை அழகமர்மென் முலையாளையோர் கூற்றானைக் குளிர்பொழிற் கோழம்பமேவிய ஏற்றானை யேத்துமின் நும்இடரேகவே.
- திருஞானசம்பந்தர்
வேழம் பத்தைவர் வேண்டிற்று வேண்டிப் போய் ஆழம் பற்றிவீழ் வார்பல வாதர்கள் கோழம் பத்துறை கூத்தன் குரைகழல் தாழும் பத்தர்கள் சாலச் சதுரரே.
- திருநாவுக்கரசர்
கருத்துகள்