168. அம்பர் பெருந்திருக்கோவில்

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில்  171 ஆவது தலமும், சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 54 ஆவது சிவத்தலமாகும். 

இறைவன்:  பிரம்மபுரீஸ்வரர்

இறைவி:  பூங்குழல் அம்மை.







அம்பன், அம்பரன் என்ற இரு அசுரர்கள் இத்தல இறைவனை பூஜை செய்து இறவா வரம் பெற்றனர். அவர்கள் வழிபட்டதால் இத்தலம் அம்பர் எனப் பெயர் பெற்றது. அம்பன், அம்பரன் ஆகிய இருவரும் தாங்கள் பெற்ற தவவலிமையால் உலகிற்கு இடையூறு விளைவித்து வந்தனர். தேவர்கள் வழக்கப்படி சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். பெருமான் பார்வதியை நோக்க, குறிப்பறிந்த தேவி காளியாக உருமாறினாள். காளி கன்னி உருவெடுத்து அவர்கள் முன் வர, வந்த அம்பிகையை இருவரும் சாதாரணப் பெண் எனக்கருதி அவரை அடைய சண்டையிட்டனர். இருவருக்கும் இடையில் நடந்த சண்டையில் மூத்தவன் இறந்தான். இளையவனைக் காளி கொன்றாள். காளி அம்பரனைக் கொன்ற இடமே அம்பகரத்தூர் ஆகும்.

ஒரு முறை படைப்புக் கடவுளான பிரம்மாவிற்கும், காக்கும் கடவுளான மஹாவிஷ்னுவிற்கும் அவர்கள் இருவரில் யார் உயர்ந்தவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டது. சிவபெருமானும் அவர்களுக்கு சோதி வடிவிலிருந்து ஓர் மலையாக மாறி திருவண்ணாமலையில் காட்சி கொடுத்தார்.. வராக அவதாரம் எடுத்த திருமால் பூமியைக் குடைந்து சென்றார். பிரம்மா அன்னப் பறவை உருவெடுத்து உயரப் பறந்து சென்றார். பிரம்மா அன்னப்பறவை உருவெடுத்து சென்றார். இருவராலும் சோதியின் அடி முடியைக் காண இயலவில்லை.  அது முடியாது போகவே, இறைவனது முடியிலிருந்து விழுந்த தாழம்பூவை சாட்சி சொல்லுமாறு கூறி விட்டுத் தான் முடியைக் கண்டதாகப் பிரம்மா பொய்யுரைத்தான்.  சிவபெருமானின் முடியைக் கண்டதாக பொய் கூறியதால் சிவபெருமான் பிரம்மாவை அன்னமாகும்படி சபித்தார். ஆயினும் பிரம்மா பிழைபொறுக்க இறைவனை வேண்டினான். சிவபெருமான் புன்னாகவனம் என்னும் இத்தலத்தை அடைந்து தவம் செய்யுமாறு கூறினார். பிரம்மாவும் அவ்வாறே இத்தலத்தை அடைந்து பொய்கை ஒன்றை உண்டாக்கி அதன் நீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து பல ஆண்டுகள் வழிபட்டு அன்ன உருவம் நீங்கி பழைய உருவம் பெற்று, படைப்புத் தொழிலை மேற்கொண்டார். 

63 நாயன்மார்களில் ஒருவரான சோமாசிமாற நாயனார் அவதரித்த தலம் இதுவே.  
எரிதர அனல்கையில்
  ஏந்தி எல்லியில்
நரிதிரி கானிடை
  நட்டம் ஆடுவர்
அரிசிலம் பொருபுனல்
  அம்பர் மாநகர்க்
குரிசில்செங் கண்ணவன்
  கோயில் சேர்வரே. 
- திருஞானசம்பந்தர்









கருத்துகள்