172. திருக்கருகாவூர்

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில்  135 ஆவது தலமும், சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 18 ஆவது சிவத்தலமாகும். 

இறைவன்:  கர்ப்பபுரீஸ்வரர், முல்லைவனநாதர், மாதவிவனேஸ்வரர்.

இறைவி:  கர்ப்பரக்ஷாம்பிகை.

காவிரியின் தென்கரையிலுள்ள பஞ்ச ஆரண்யங்களுள் இதுவுமொன்று; அவை:- 1. கருகாவூர் - முல்லைவனம், 2. அவளிவணல்லூர் - பாதிரிவணம், 3. அரதைப்பெரும்பாழி - வன்னிவனம், 4. இரும்பூளை - பூளைவனம், 5. கொள்ளம்புதூர் - வில்வவனம் என்பனவாம். இவ்வைந்து தலங்களையும் முறையே வைகறை, காலை, நண்பகல், மாலை, அர்த்த சாமம் ஆகிய காலங்களில் வழிபடும் பழக்கம் நன்று. 





நிருத்துவ முனிவரும் அவர் மனைவி வேதிகையும் இத்தலத்தில் வசித்து வந்தனர். ஒரு முறை நிருத்துவ முனிவர் ஒரு முக்கிய காரணமாக் வெளியூர் செல்ல நேர்ந்தது. அவர் மனைவி வேதிகை அப்போது கர்ப்பமுற்று இருந்தாள். அக்காலம் நல்ல வெய்யில் காலமாதலால் வேதிகை மிகவும் களைப்புற்று வீட்டில் படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தாள். ஊர்த்துவ முனிவர் என்ற மற்றொரு தவசீலர் இவ்வழியாக சென்று கொண்டிருந்தார். வெய்யில் காலம் காரணமாக் அவரும் மிகவும் களைப்புற்று வீட்டில் இருப்பவர்களால் உணவும் தண்ணீரும் கிடைக்கும் என்று கருதி குரல் கொடுத்து கூப்பிட்டார். ஆனால் யாரும் வெளி வராதது கண்டு உள்ளே எட்டிப் பார்க்க வேதிகை அவருக்கு எதிர்புறமாக திரும்பிப் படுத்து உறங்கக் கண்டார். வேதிகை கர்ப்பமுற்று களைப்பால் படுத்து இருப்பதை அறியாத அவர் கோபமுற்று அவளை சபித்துவிட்டு சென்று விட்டார். விழித்து எழுந்த வேதிகை பார்ப்பதற்குள் அவர் வெகு தூரம் சென்று விட்டார். முனிவரின் கோபத்திற்கு ஆளாகி விட்ட அச்சத்தில் அவள் முல்லைவன நாதரையும் இறைவியையும் வணங்கி தன் கர்ப்பத்தைக் காப்பாற்றச் சொல்லி வழிபட்டாள். இறைவியும் வேதிகை பக்திக்கு மெச்சி அவள் கருவைக் காப்பாற்றி அருள் புரிந்தாள். வேதிகையின் கரு சிதையாமல் அம்பாள் காத்து ரக்ஷித்தபடியால் கர்ப்ப ரக்ஷாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள்.  கருச்சிதைவை இறைவன் மருத்துவம் பார்த்து அவள் கருவைக் காத்ததால் - கருகாவூர் என்று பெயர் பெற்றது.
முத்தி லங்குமுறு  வல்லுமை யஞ்சவே
மத்த யானைமறு  கவ்வுரி வாங்கியக்
கத்தை போர்த்தகட  வுள்கரு காவூரெம்
அத்தர் வண்ணம்மழ  லும்மழல் வண்ணமே.
- திருஞானசம்பந்தர்

 குருகாம் வயிரமாங் கூறு நாளாங் 
	கொள்ளுங் கிழமையாங் கோளே தானாம்
பருகா அமுதமாம் பாலின் நெய்யாம் 
	பழத்தின் இரதமாம் பாட்டிற் பண்ணாம்
ஒருகா லுமையாளோர் பாக னுமாம்
	உள்நின்ற நாவிற் குரையா டியாங்
கருவா யுலகுக்கு முன்னே தோன்றுங் 
	கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.
- திருநாவுக்கரசர்
 

கருத்துகள்