174. திருஅன்னியூர் (அன்னியூர்)

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில்  179 ஆவது தலமும், சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 62 ஆவது சிவத்தலமாகும். 

இறைவன்:  அக்னீசுவரர்.

இறைவி:  பார்வதி.







சிவபெருமானை புறக்கணித்துவிட்டு மற்ற அனைவரையும் அழைத்து தட்சன் யாகம் நடத்தினான். சிவபெருமான் இல்லாது நடக்கும் யாகம் யாகமாகாது என ததீசி முதலான முனிவர்கள் கூறியும் தட்சன் கேட்கவில்லை.  யாகத்தில் கலந்து கொண்டவர்களில் அக்னி தேவனும் ஒருவன். அவ்வேள்வியில் இடப்பட்ட அவிர்பாகத்தை அக்னிதேவன் தன் கையால் அனைத்து தேவதைகளுக்கும் அளித்தான். சிவனை அவமதித்து நடத்தப்பட்ட யாகத்தில் கலந்து கொண்டதற்காக இவன் வீரபத்திரராலும் கையையும், நாவையும் இழந்து  தண்டிக்கப்பட்டு சாபம் பெற்றான். அக்னிக்கு சாபம் ஏற்பட்டதால் எந்த யாகத்திலும் கலந்து கொள்ள முடியவில்லை. யாகம் நடத்தப்படாததால், மழைவளம் குன்றியது. உயிர்கள் வாட தொடங்கின. இதனால் வருந்திய அக்னி தேவன், பல தலங்களில் ஈசனை வழிபட்டு தனக்கு ஏற்பட்ட சாபத்திலிருந்து மீள வேண்டினான். அச்சமயம் இத்தலத்திற்கும் வந்து லிங்கம் அமைத்து, தீர்த்தம் உண்டாக்கி, வன்னி இலைகளால் இறைவனை அர்ச்சித்து  வழிபட்டான். அப்பொழுது இறைவன் அங்கு தோன்றி அக்னிதேவனுக்கு 'ஸ்வாஹ' எனும் சக்தியை அளித்து மேல்நோக்கி செல்லும் தன்மையையும் அளித்தார். அக்னி தேவன் வழிபட்ட தலமாதலால் இறைவன் அக்னிபுரீஸ்வரர் ஆனார். 

பார்வதி தேவி காத்தியாயன முனிவரின் மகளாகப்பிறந்து இறைவனை அடைய இத்தலத்தில் தவமிருந்தாள். இறைவன் இவளுக்கு காட்சி தந்து இத்தலத்தின் அருகிலுள்ள திருவீழிமிழலையில் திருமணம் செய்து கொண்டார்.

காடு கொண்டு அரங் காக்கங்குல் வாய்க்கணம்
பாட மாநட மாடும் பரமனார்
வாட மானிறம் கொள்வார் மனங்கமழ்
மாட மதில் சூழ்வன்னி யூரே.
- திருநாவுக்கரசர்

கருத்துகள்