177. குடந்தைக் காரோணம்

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில்  145 ஆவது தலமும், சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 28 ஆவது சிவத்தலமாகும். 

இறைவன்:  சோமேசர், சிக்கேசர், சோமநாதர்.

இறைவி:  சோமசுந்தரி, தேனார் மொழியாள்.






உலகம் அழியும் பிரளய நேரம் வந்தபோது, பிரம்மா தனது படைப்பு ஆற்றலை எல்லாம் அமுதத்தில் கலந்து ஒரு குடத்தில் (கும்பம்) இட்டு அந்தக் குடத்தை இமயமலை உச்சியில் பாதுகாப்பாக வைத்தார். பிரளய காலத்தில் கடல் பொங்கி இமயமலை உச்சி வரை சென்ற போது பாதுகாப்பாக வைக்கப்பட்ட குடம் நீரில் மிதந்து சென்று தெற்கே வந்து பிரளய நீர் வடிந்ததும் ஓரிடத்தில் தரைதட்டி நின்றது. அவ்வாறு குடம் நின்ற இடமே நாம் இப்போது கும்பகோணம் என்று கூறும் குடமூக்கு என்ற பாடல் பெற்ற தலம். சிவபெருமான் தரை தட்டிய குடத்தின் மீது அம்பைச் செலுத்தி, குடம் உடைந்து அமுதம் கொட்டியது. சிவபெருமான் அமுதத்தில் நனைந்த மணலால் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி அதனுள் அவர் ஐக்கியமானார். குடம் உடைந்து கீழே சிந்திய அமுதம், மணல் இவற்றால் உருவான இவர் ஆதிகும்பேஸ்வரர் என்ற பெயரில் இவ்விடத்தில் தங்கினார். சிவபெருமான் குடத்தின் மீது அம்பைச் செலுத்திய போது அமுத கும்பத்திற்கு ஆதாரமாக இருந்த உரி சிதறி விழுந்தது. அவ்விடத்தில் ஒரு லிங்கம் தோன்றியது. இந்த லிங்கத்தை சந்திரன் வழிபட்டான். எனவே இவ்வாலயத்திலுள்ள இறைவனுக்கு சோமேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. 

இத்தலத்தில் இராமபிரான், இராவணனைக் கொல்ல ருத்ராம்சம் வேண்டி சிவபெருமானை வழிபட்டு உடலில் ருத்ராம்சம் ஆரோகணிக்கப் பெற்றதால் (காய - ஆரோகணம்) காரோணம் என்று பெயர் பெற்றது.  மகாபிரளய காலத்தில் ஆன்மாக்களை இறைவன் ஐக்கியமாக்கிக் கொண்ட தலமாதலால் காரோணம் என்றும், இந்த சோமேசர் கோயில் அம்பிகை, இறைவன் திருமேனியை ஆரோகணித்த தலமாதலின் காரோணம் என்றாயிற்று.
 வாரார் கொங்கை மாதோர் பாகம் ஆகவார் சடை
நீரார் கங்கை திங்கள் சூடி நெற்றி ஒற்றைக்கண்
கூரார் மழுவொன்று ஏந்தி அந்தண் குழகன் குடமூக்கில்
காரார் கண்டத்து எண்தோள் எந்தை காரோணத் தாரே.
- திருஞானசம்பந்தர்

கருத்துகள்