179. திருப்பனையூர்

திருப்பனையூர் - இது தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் 190வது ஸ்தலமாகும், சோழ நாட்டில் காவேரி நதியின் தெற்கு கரையில் அமைந்த 73வது ஸ்தலமாகும். இந்த இடம் முன்னம் "தலவனம்" (பனங்காடு) என அழைக்கப்பட்டது, இங்கு உள்ள கோவில் "தலவனேஸ்வரம்" என அழைக்கப்படுகிறது.

இறைவன்:   சௌந்தரேஸ்வரர், அழகியநாதர், தாலவனேஸ்வரர்.  

இறைவி: பிரஹந்நாயகி, பெரியநாயகி.

சுந்தரர், திருவாரூர்ப் பங்குனி உத்தரத் திருநாளுக்காகப் பரவையாரின் வேண்டுகோளின்படி, திருப்புகலூர் இறைவனிடம் பொன் பெற்று "தம்மையே புகழ்ந்து" என்று பாடித் திருப்புகலூர் வணங்கிய பின்பு, திருப்பனையூர் வரலானார். அப்போது ஊரின் எல்லையில்  இறைவன் நடனக் காட்சி காட்டியருள, எதிர் சென்று தொழுது, வீழ்ந்து வணங்கி, 'அரங்காடவல்லார் அழகியர் ' என்று பதிகம் பாடி, அருள் பெற்றார். 





தந்தையை இழந்து பிறந்த கரிகாலனை கொன்று அரசைக் கைப்பற்ற நினைத்த தாயத்தார்களிடமிருந்து காப்பாற்ற முயன்ற தாய் மாமனாகிய 'இரும்பிடர்த்தலையார் ' என்னும் சங்கப் புலவர், பிறர் அறியாமல், குழந்தையையும் தாயையும் பனையூர்க்கு அனுப்பி வைத்தார். அரசி, தன் மகனுடன் இவ்வூர்க்கு வந்து, இக்கோயிலில் அடைக்கலம் புகுந்து, இவ்விநாயகரிடம் முறையிட்டு, அவர் துணையால் எட்டு ஆண்டுகள் பாதுகாப்பாக இருந்தாள். ஆகவே கரிகாற் சோழனுக்குத் துணையிருந்ததனால் இவ்விநாயகர் 'துணை இருந்த விநாயகர் ' என்னும் பெயர் பெற்றார்.
அரவச் சடைமேல் மதிமத்தம்
விரவிப் பொலிகின் றவனூராம்
நிரவிப் பலதொண் டர்கள்நாளும்
பரவிப் பொலியும் பனையூரே. 
- திருஞானசம்பந்தர்

மாடமாளிகை கோபுரத்தொடு மண்டபம்வள ரும்வளர்பொழில்
பாடல் வண்டறையும் பழனத் திருப்பனையூர்த்
தோடுபெய்தொரு காதினிற்குழை தூங்கத்தொண்டர்கள் துள்ளிப்பாடநின்
றாடு மாறுவல்லார் அவரே அழகியரே.
- சுந்தரர்

கருத்துகள்