இது தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் 192வது ஸ்தலமாகும், சோழ நாட்டில் காவேரி நதியின் தெற்கு கரையில் அமைந்த 75வது ஸ்தலமாகும். மூவர் பாடல் பெற்ற தலம் என்ற பெருமையுடைய திருப்புகலூர் அக்னீசுவரர் ஆலயம் ஒரு பெரிய கோவில்.
இறைவன்: அக்னிஸ்வரர், சரண்ய புரீஸ்வரர், கோணப்பிரான்.
இறைவி: கருந்தார்குழலி, சூளிகாம்பாள்.
திருவாரூரில் பங்குனி விழா ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாக நடைபெறும். ஒரு சமயம் அவ்வாறு பங்குனி விழாவின் போது தனது மனைவி பரவையார் செலவிற்குப் பொன் பெற விரும்பி சுந்தரர் திருப்புகலூர் வந்தார். திருப்புகலூரில் கோயில் கொண்டுள்ள இறைவனை வணங்கி தனது கருத்தைப் பதிகத்தில் வைத்துப் பாடினார். பிறகு மற்ற அடியார்களுடன் கோவிலில் சிறிது நேரம் இளைப்பாறினார். தூங்குவதற்காக அங்கிருக்கும் செங்கற்களை தலைக்கு உயரமாக வைத்துத் தம் மேலாடையாகிய வெண்பட்டை விரித்துப் படுத்தார். துயில் நீங்கி சுந்தரர் எழுந்தபோது தம் தலையணையாக வைத்திருந்த செங்கற்களெல்லாம் பொற்கட்டிகளாக மாறி இருக்கக் கண்டு வியப்படைந்தார். இறைவனை 'தம்மையே புகழ்ந்து' என்று தொடங்கும் திருப்பதிகம் பாடி வணங்கினார்.
![]() |
அப்பர் (திருநாவுக்கரசர்) தனது 81-ம் வயதில் இத்தலத்தில் உழவாரப் பணி செய்த போது, 'புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன்' என்று புகழ்ந்து இறைவன் திருவடியில் சித்திரை சதய நட்சத்திர நாளில் முக்தி அடைந்தார். எனவே, இது சதய நட்சத்திர தலமாக விளங்குகிறது.
பாணாசுரன் என்ற அசுரனின் தாயார் சிவபூஜை செய்பவள். தாயாரின் பூஜைக்காக சுயம்பு லிங்கங்களைப் பெயர்த்து எடுத்து வருகிறான் பாணாசுரன். ஆணால் திருப்புகலூர் அக்னீசுவரரை பெயர்த்து எடுக்க முடியாமல் போகவே தன்னையே பலி கொடுக்க முயற்ச்சி செய்யும் போது இறைவன் அவனை தடுத்து ஆட்கொள்கிறார். பாணாசூரன் தோண்டிய அகழியே நாற்புறமும் தீர்த்தமாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.. அவன் தாயாரின் பூஜையை இருந்த இடத்தில் இருந்தே ஏற்றுக் கொண்டதின் அடையாளமாக தலை சாய்த்து காட்சி அளிக்கிறார். அதனாலேயே இறைவன் கோணப்பிரான் என்றும் அறியப்படுகிறார்.
குறிகலந்தஇசை பாடலினான் நசையாலிவ் வுலகெல்லாம் நெறிகலந்ததொரு நீர்மையனாயெரு தேறிப் பலி1பேணி முறிகலந்ததொரு தோலரைமேலுடை யானிடம் மொய்ம்மலரின் பொறிகலந்த பொழில்சூழ்ந்த யலேபுயலாரும் புகலூரே.
- திருஞானசம்பந்தர்
செய்யர் வெண்ணூலர் கருமான் மறிதுள்ளுங் கையர் கனைகழல் கட்டிய காலினர் மெய்யர் மெய்ந்நின் றவர்க்கல்லா தவர்க்கென்றும் பொய்யர் புகலூர்ப் புரிசடை யாரே.
- திருநாவுக்கரசர்
தம்மையேபுகழ்ந் திச்சைபேசினுஞ் சார்வினுந்தொண்டர் தருகிலாப் பொய்ம்மையாளரைப் பாடாதேயெந்தை புகலூர்பாடுமின் புலவீர்காள் இம்மையேதருஞ் சோறுங்கூறையும் ஏத்தலாமிடர் கெடலுமாம் அம்மையேசிவ லோகமாள்வதற் கியாதுமையுற வில்லையே.
- சுந்தரர்
கருத்துகள்