இது தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் 198வது ஸ்தலமாகும், சோழ நாட்டில் காவேரி நதியின் தெற்கு கரையில் அமைந்த 81வது ஸ்தலமாகும்.
இறைவன்: அயவந்தீஸ்வரர், பிரமபுரீஸ்வரர்.
இறைவி: உபய புஷ்ப விலோசனி, இருமலர்க்கண்ணம்மை.
63 நாயன்மார்களில் ஒருவரான திருநீலநக்க நாயனாரின் அவதாரத் தலம் திருசாத்தமங்கை. திருநீலநக்கர் தன் மனைவி மங்கையர்க்கரசியுடன் அனுதினமும் அயவந்தீஸ்வரரை கொன்றை மலர்களால் வழிபடுவது வழக்கம். திருநீலநக்கர் ஒருமுறை மனைவியோடு திருக்கோயிலுக்குச் சென்றிருந்தார். கருவறையில் லிங்கத் திருமேனி மீது ஒரு சிலந்திப் பூச்சியைக் கண்ட அவரது மனைவி, அதனைத் தன் வாயினால் ஊதி அகற்றிட, மனைவியின் எச்சில் இறைவன் திருமேனியில் பட்டுவிட்டதாகக் கருதிய நீலநக்கர் கடுஞ்சினங் கொண்டார். அதனை தகாத செயலாகக் கருதி, மனைவியைப் பிரிந்து வாழத் துவங்கினார். வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த அவரது கனவில் இறைவன் தோன்றி, நாயனாரின் மனைவி வாயினால் ஊதிய பகுதி தவிர இதர பகுதிகள் முழுதும் லிங்கத் திருமேனியில் கொப்புளமாகக் காட்சியளிப்பதைச் சுட்டிக்காட்டி, அம்மங்கையின் பெருமையை உலகுக்கு வெளிப்படுத்தினார். விடிந்தும் ஆலயத்துக்கு ஓடிவந்த நீலநக்கர் இறைவனுக்கு நேர்ந்ததை எண்ணிக் கலங்கிய அதேநேரம் மனைவிக்காக அந்த இறைவனே பரிந்துரைத்ததை எண்ணி உள்ளம் பூரித்தார். மங்கையர்க்கரசியாரைத் தன்னுடன் அழைத்துக்கொண்டார்.
திருமலர்க் கொன்றைமாலை திளைக்கும்மதி சென்னிவைத்தீர் இருமலர்க் கண்ணிதன்னோ டுடனாவது மேற்பதொன்றே பெருமலர்ச் சோலைமேகம் உரிஞ்சும்பெருஞ் சாத்தமங்கை அருமல ராதிமூர்த்தி அயவந்திய மர்ந்தவனே.
- திருஞானசம்பந்தர்




கருத்துகள்