இது தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் 191வது ஸ்தலமாகும், சோழ நாட்டில் காவேரி நதியின் தெற்கு கரையில் அமைந்த 74வது ஸ்தலமாகும்.
இறைவன்: வீரட்டானேஸ்வரர்.
இறைவி: ஏலவார் குழலி, பரிமள நாயகி.
சிவபெருமான் எட்டு வீரச் செயல்கள் நிகழ்த்திய அட்ட வீரட்டத்தலங்களில் திருவிற்குடியும் ஒன்றாகும். சலந்தாசுரன் என்பவன் பிரம்மாவை நோக்கி கடும் தவம் செய்து சாகாவரம் கேட்டான். பிரம்மா அவ்வாறு சாகாவரம் தர இயலாது என்று கூற, சலந்தாசுரன் "தர்ம பத்தினியான என் மனைவி பிருந்தை எப்போது மனதளவில் கெடுகிறாளோ அப்போது எனக்கு அழிவு வரட்டும்" என வரம் வாங்கி விட்டான். தனது வரத்தின் பலத்தாலும், உடல் வலிமையாலும் செருக்குற்று தேவர்களுக்கு தொல்லைகள் பல கொடுத்தான். தேவர்கள் கயிலை மலையை அடைந்து சிவபெருமானிடம் சரண் அடைந்தனர். சலந்தாசுரன் போர்க்கோலம் பூண்டு கயிலை மலையை அடைந்தான். சிவபெருமான் ஒரு கிழ அந்தணர் வேடத்தில் சலந்தாசுரன் முன்பு தோன்றினார். அதற்கு முனபு திருமாலை சலந்தாசுரன் போல் வடிவெடுத்து அவன் மனைவி பிருந்தை முன் செல்லும்படி கூறினார். கணவன் தான் வந்திருக்கிறார் என வீட்டிற்குள் அழைத்தாள் பிருந்தை. ஒரு நொடியில், மாற்றானை தன் கணவன் என நினைத்ததால் அவளது மனம் களங்கமடைந்தது. இத்தருணத்தில் சலந்தாசுரனிடம் தான் கூறும் ஒரு சிறிய செயலை அவனால் செய்ய முடியுமா என்று சிவபெருமான் கேட்டார். தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்று செருக்குடன் சலந்தாசுரன் கூறினான். சிவபெருமன் தனது காற் பெருவிரல்லால் மண்ணில் ஒரு வட்டமிட்டு, 'அந்த வட்டத்தைப் பெயர்த்து உன் தலை மேல் தாங்கி நில்' என்று சலந்தாசுரனிடம் கூறினார். அவனும் பெரு முயற்சிக்குப் பின் அந்த வட்டத்தைப் பெயர்த்தெடுத்து தன் தலை மேல் தாங்கினான். மனைவி பிருந்தையின் மனம் சிறிது நேரம் களங்கப்பட்டதால், அந்த வட்டச் சக்கரம் சலந்தாசுரன் உடலை இருகூறாகப் பிளந்துவிட்டு இறைவனின் கரத்தில் அமர்கிறது. சலந்தாசுரன் என்பவனை சக்கரத்தால் சிவபெருமான் அழித்த இத்தலம் அஷ்ட வீரட்டானத் தலங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது.
சலந்தாசுரன் மனைவி தன் கணவர் இறக்கக் காரணமாக இருந்த மகாவிஷ்ணுவைப் பார்த்து "நான் கணவனை இழந்து வருந்துவது போல, நீயும் உன் மனைவியை இழந்து வருந்த வேண்டும்" என சாபம் கொடுத்து விட்டு தீக்குளித்தாள். இதனால் தான், விஷ்ணு ராமாவதாரம் எடுக்க வேண்டி வந்து, மனைவியைப் பிரிந்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. பிருந்தையின் சாபத்தினால் விஷ்ணுவுக்கு பித்து பிடித்தது. பித்தை தெளிவிக்க பிருந்தை தீகுளித்த இடத்தில் சிவன் ஒரு விதை போட்டார். இந்த விதை விழுந்த இடத்தில் துளசி செடி வளர்ந்தது. இந்த துளசியால் மாலை தொடுத்து திருமாலுக்கு சாற்ற அவரின் பித்து விலகுகிறது. துளசி தான் இங்கு தல விருட்சம் என்பது குறிப்பிடத் தக்கது.
வடிகொள் மேனியர் வானமா மதியினர் நதியினர் மதுவார்ந்த கடிகொள் கொன்றையம் சடையினர் கொடியினர் உடைபுலி யதளார்ப்பர் விடைய தேறும்எம் மான்அமர்ந்து இனிதுறை விற்குடி வீரட்டம் அடியர் ஆகிநின்று ஏத்தவல் லார்தமை அருவினை அடையாவே.
- திருஞானசம்பந்தர்
கருத்துகள்