இது தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் 197வது ஸ்தலமாகும், சோழ நாட்டில் காவேரி நதியின் தெற்கு கரையில் அமைந்த 80வது ஸ்தலமாகும்.
இறைவன்: மாணிக்கவண்ணர், இரத்தினகிரீஸ்வரர்.
இறைவி: வண்டுவார் குழலி, ஆமோதாளக நாயகி.
கோச்செங்கட் சோழன் கட்டிய யானை ஏற முடியாத மாடக்கோவில்களில் திருமருகல் ஆலயமும் ஒன்றாகும். மருகல் என்பது ஒருவகை கல்வாழை வகை. இதைத் தலமரமாகக் கொண்டதாதலின் இத்தலம் "திருமருகல்" என்று பெயர் பெற்றது.
பாண்டியநாட்டு வணிகனாகிய தாமன் என்பவன் தன் மக்கள் எழுவரில் ஒருத்தியைத் தன் மருமகனுக்குக் கொடுப்பதாக வாக்களித்தான். ஆனால் வாக்களித்தடி நடக்காமல்,அவனுடைய பெணகளுக்கு பருவம் வந்த காலத்து ஒவ்வொருத்தியாகப் பிறருக்கு மணம் செய்து கொடுத்தான். அதனை உணர்ந்த ஏழாவது பெண் தாய் தந்தையர் அறியாமல் தன் மாமனோடு வெளியேறி பெரியவர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் புரிந்து கொள்ள நிச்சயித்தனர். திருமருகலையடைந்து ஒரு திருமடத்தில் அவர்கள் இருவரும் இரவு தங்கினர். அன்றிரவு அந்தச் செட்டி குமரனை வினையின் காரணமாக பாம்பு தீண்டி அவன் இறந்தான். திருமணம் ஆகாததால் வனிகனின் உடலைத் தீண்டமாட்டாளாய், இறைவன் மேல் தீராத பக்தி கொண்ட அந்தப் பெண் இறைவனை நோக்கி முறையிட்டுப் புலம்பினாள். சுவாமி தரிசனத்திற்காக வந்த திருஞானசம்பந்த சுவாமிகள் திரு உள்ளத்தை இவள் அழுகை ஒலி அருள் சுரக்கச் செய்தது. இளம் பெண்ணின் அழுகைக் குரலையும் அவளின் நிராதரவான நிலையையும் கண்டு இரக்கப்பட்ட திருஞானசம்பந்தர் இறைவன் மேல் பதிகம் பாட சுற்றிலும் உள்ளோர் அதிசயிக்கும்படி வணிகன் உயிர்பெற்று எழுந்தான். பிறகு அந்த பெண்ணிற்கும் வணிகனுக்கும் இறைவன் முன்னிலையில் சம்பந்தர் மணம் நடத்தி வாழ்த்தி அருளினார். திருமாலை விட்டுப் பிரிந்த மஹாலக்ஷ்மியும் இத்தலத்திற்கு வந்து சிவனை வழிபாடு செய்து மீண்டும் திருமாலுடன் இணைந்து வாழ அருள் பெற்றாள் என்று தலபுராணம் கூறுகிறது.
சடையாயெனுமால் சரண்நீ எனுமால் விடையா யெனுமால்வெருவா விழுமால் மடையார் குவளை மலரும் மருகல் உடையாய் தகுமோ இவளுண் மெலிவே.
- திருஞானசம்பந்தர்
பெருக லாந்தவம் பேதைமை தீரலாந் திருக லாகிய சிந்தை திருத்தலாம் பருக லாம்பர மாயதோ ரானந்தம் மருக லானடி வாழ்த்தி வணங்கவே.
- திருநாவுக்கரசர்
கருத்துகள்