187. திருச்செங்காட்டங்குடி

இது தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் 196வது ஸ்தலமாகும், சோழ நாட்டில் காவேரி நதியின் தெற்கு கரையில் அமைந்த 79வது ஸ்தலமாகும். 

இறைவன்: உத்தராபதீஸ்வரர், ஆத்திவனநாதர், மந்திரபுரீசுவரர், கணபதீஸ்வரர், பிரமபுரீஸ்வரர், பாஸ்கரபுரீஸ்வரர்.  

இறைவி: சூளிகாம்பாள் (குழலம்மை), திருகுகுழல் உமைநங்கை.

கஜமுகன் என்னும் யானை முகம் கொண்ட அசுரன், தேவர்களை துன்புறுத்தி வந்தான். தேவர்கள் கஜமுகாசுரனிடமுருந்து தங்களைக் காக்கும்படி சிவனை வேண்டினர். சிவபெருமான் கணபதியை அனுப்பி அசுரனை சம்ஹாரம் செய்தார். இதனால் கணபதிக்கு தோஷம் உண்டாகவே, பூலோகம் வந்து சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து தவமிருந்தார். சிவன் அவரது தோஷம் நீக்கியருளினார். மேலும் அவரது வேண்டுதலுக்காக அவர் தவமிருந்த இடத்தில் லிங்கமாக எழுந்தருளி கணபதீஸ்வரர் என்றும் பெயர் பெற்றார். இத்தலமும் கணபதீச்சுரம் என்று பெயர் பெற்றது. விநாயகரால் சம்ஹாரம் செய்யப்பட்ட கஜமுகாசுரனின் செங்குருதி (ரத்தம்) இப்பகுதியில் காடாய்ப் பெருகியமையால் இத்தலம் "திருச்செங்காட்டங்குடி" எனப் பெயர் பெற்றது.



பல்லவ மன்னன் நரசிம்மவர்மனிடம் சேனாதிபதியாக இருந்த பரஞ்ஜோதி வாதாபி போரிலிருந்து திரும்பி வந்த பிறகு தன்னை முழுமையாக சிவசேவையில் ஈடுபடுத்திக் கொண்டார். அடியார்களுக்கும் அடியாராக இருந்து தொண்டு செய்ததால் "சிறுதொண்டர்" என்று சிறப்புப் பெயர் பெற்றார். சிறுதொண்டரின் பெருமையை உலகறியச் செய்ய விரும்பிய சிவபெருமான் இவரை சோதிக்க சிவனடியார் வேடம் பூண்டு வந்தார். அப்போது சிறுதொண்டர் வீட்டில் இல்லை. அவரது மனைவி திருவெண்காட்டு நங்கை, பணிப்பெண் இருவரும் அடியாரை சாப்பிட அழைத்தனர். அவர்களிடம், ஆண் இல்லாத வீட்டில் சாப்பிட மாட்டேன் என்றவர், இக்கோயிலில் உள்ள ஆத்தி மரத்தடியில் காத்திருப்பதாகச் சொல்லிச் சென்றார். வீடு திரும்பிய சிறுதொண்டர் நடந்ததை அறிந்தார். கோயிலுக்கு வந்து அடியாரை அழைத்தார். அந்த சிவனடியார் சிறுதொண்டரிடம் அவரது மனைவியிடமும் அவர்களது பிள்ளை சீராளனை அறுத்து கறிசமைத்து தர வேண்டும் என்றார். சற்றும் தயங்காத சிறுத்தொண்டரும், அவரது மனைவி திருவெண்காட்டு நங்கையும் அவ்வாறே செய்தனர். அவரது பக்தியைப் பாராட்டிய சிவன், சீராளனை உயிர்ப்பித்து அவரிடம் ஒப்படைத்தார். சிறுதொண்டருக்கு நாயன்மார்களில் ஒருவராகும் அந்தஸ்தைக் கொடுத்தார்.



உத்தராபசுபதீஸ்வரர்: ஐயடிகள் காடவர்கோன் என்ற பல்லவ மன்னர் (63 நாயன்மார்களில் இவரும் ஒருவர்) சிறுத்தொண்டருக்கு இறைவன் காட்சி கொடுத்து அருளியதைக் கேள்விப்பட்டார். சிறுத்தொண்டருக்குக் காட்சி கொடுத்த இறைவனை தானும் தரிசிக்க விரும்பி வேண்டினார். இறைவனும் "சித்திரை திருவோணத்தில் உத்திராபதி உருவம் அமைத்து குடமுழுக்கு செய்தால் யாம் சணபகப் பூ மணம் வீச காட்சி தருகிறோம்" என்று அருளினார். மன்னரின் ஆணைப்படி கொல்லர்கள் உத்தராபசுபதீஸ்வரருக்கு சிலை வடித்தபோது, எவ்வளவு முயன்றும் சரியாக அமையவில்லை. அப்போது அங்கு வந்த அடியவர் ஒருவர், சிற்பிகளிடம் தண்ணீர் கேட்டார். சிலை சரியாக அமையாத கோபத்தில் இருந்தவர்கள், "உலைக்களத்தில் நீர் ஏது? காய்ச்சிய மழுதான் உள்ளது; வேண்டுமானால் ஊற்றுகிறோம்" என்றனர். சிவயோகியார், "நல்லது; அதையே ஊற்றுங்கள்" என்றார். கொல்லர்கள் காய்ச்சிய  உலோகக்  கலவையை ஊற்ற, வாங்கியுண்ட சிவயோகியார் அங்கிருந்து மறைந்தார்  சிவனே சிலையாக அமைந்ததைக் கண்டு மகிழ்ந்த மன்னர், அச்சிலையை இங்கு பிரதிஷ்டை செய்தார். அவ்வேளையில் சிவன், செண்பகப்பூ மணம் கமழ காட்சி தந்தார். 

சிவபெருமான் ஆடிய நவதாண்டவங்களில் திருசெங்காட்டங்குடியில் ஆடியது உபயபாத நர்த்தனம் எனப்படுகிறது.






பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைகள் பயப்பூரச்
சங்காட்டந் தவிர்த்தென்னைத் தவிராநோய் தந்தானே
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டன் பணிசெய்ய
வெங்காட்டுள் அனல் ஏந்தி விளையாடும் பெருமானே.
- திருஞானசம்பந்தர்

பெருந்தகையைப் பெறற்கரிய மாணிக் கத்தைப்
        பேணிநினைந் தெழுவார்தம் மனத்தே மன்னி
இருந்தமணி விளக்கதனை நின்ற பூமேல்
        எழுந்தருளி யிருந்தானை எண்டோள் வீசி
அருந்திறல்மா நடமாடும் அம்மான் தன்னை
        அங்கனகச் சுடர்க்குன்றை அன்றா லின்கீழ்த்
திருந்துமறைப் பொருள்நால்வார்க் கருள்செய் தானைச்
        செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. 
- திருநாவுக்கரசர்

கருத்துகள்