இது தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் 196வது ஸ்தலமாகும், சோழ நாட்டில் காவேரி நதியின் தெற்கு கரையில் அமைந்த 78வது ஸ்தலமாகும்.
இறைவன்: முக்தபுரீஸ்வரர், திருப்பயற்றுநாதர்.
இறைவி: சூளிகாம்பாள் (குழலம்மை), நேத்ராம்பிகை, காவியங்கண்ணி.
முன்னொரு காலத்தில் சிவபெருமானிடத்தே பேரன்பு கொண்ட வணிகர் ஒருவர் மிளகு வாணிகம் செய்து வந்தார். அவர் ஒருமுறை கடல் மூலம் சரக்கை ஏற்றுமதி செய்ய கடல்துறை நோக்கி இத்தலத்தின்வழியே செல்லும்போது சுங்கச்சாவடி அண்மையில் இருக்கக்கண்டார். அந்நாளில் மிளகுக்கு சுங்க வரி விதிக்கப்படும் வழக்கம் இருந்தது. ஆனால் பயறு மூட்டைகளுக்கு சுங்கவரி இல்லை. வணிகர் இத்தலத்தின் பெருமானையடைந்து, பயற்றுக்கு வரியில்லையாதலால் தம்முடைய மிளகையெல்லாம் பயறாக மாற்றும்படி வேண்டினார். சிவ பக்தராகிய இவர் இத்தல சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டபடி மறுநாள் காலை வணிகர் எழுந்து பார்த்த போது மிளகு மூட்டைகள் எல்லாம் பயறு மூட்டைகளாக மாறி இருப்பதைக் கண்டார். மகிழந்த வணிகர் நாகப்பட்டினம் நோக்கி பயணத்தை துவக்கினார். சுங்கச்சாவடி வந்தது. சுங்க அதிகாரிகள் அனைத்து மூட்டைகளையும் சோதனை செய்தனர். பயறு மூட்டைகளாக இருப்பதை அறிந்து வரி விதிக்காமல் அனுப்பி விட்டனர். சுங்கச்சாவடி கடந்த பின் பயறு மூட்டைகள் அனைத்தும் மிளகு மூட்டைகளாக மாறிவிட்டன. வணிகர் மிக்க இலாபம் பெற்றார். வணிகர் மிளகு விற்ற பணத்தில் கிடைத்த லாபத்தையெல்லாம் சிவன் சேவைக்கு செலவு செய்து இறைவனை அடைந்தார். இதனால் இத்தலம் "திருப்பயற்றூர்" எனவும், இறைவன் "திருப்பயற்றுநாதர்" எனவும் அழைக்கப்படுகிறார். மேற்கண்ட செவிவழிக் கதையால் இத்தலத்தின் பெயரும் சிறப்பும் விளங்குகின்றது.
உரித்திட்டார் ஆனையின்தோல் உதிரஅறு ஒழுகியோட விரித்திட்டார் உமையாள் அஞ்சி விரல் விதிர்த்து அலக்கல் நோக்கித் தரித்திட்டார் சிறிது போது தரிக்கிலர் ஆகித் தாமும் சிரித்திட்டார் எயிறு தோன்றத் திருப்பயற்று ஊர னாரே.
கருத்துகள்