இது தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் 203வது ஸ்தலமாகும், சோழ நாட்டில் காவேரி நதியின் தெற்கு கரையில் அமைந்த 86வது ஸ்தலமாகும்.
இறைவன்: முக்கோணநாதர், திரிநேத்ர சுவாமி, முக்கூடல்நாதர்.
இறைவி: அஞ்சனாட்சி, மைமேவு கண்ணி.
இராமாயண இதிகாசத்தில் வரும் ஜடாயுவுடன் தொடர்புடையதாதலால் இத்தலத்தை இங்குள்ள மக்கள் "குருவிராமேஸ்வரம்" என்றும் கூறுகின்றனர். ஒரு முறை காசி மற்றும் ராமேஸ்வரம் தீர்த்தத்தில் ஒரே சமயத்தில் நீராடி, இரண்டு தலங்களையும் ஒன்றாக தரிசித்து முக்தி அடைவதற்காக ஜடாயு இத்தலத்தில் தவம் செய்தது. இதன் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் ஜடாயுவுக்கு தரிசனம் தந்து, "இராவணன் சீதையை எடுத்து வரும் நேரத்தில் நீ தடுப்பாய். அப்போது அவன் உன் சிறகுகளை வெட்ட நீ வீழ்ந்து இறப்பாய்” என்றாராம். அது கேட்ட ஜடாயு "பெருமானே, அப்படியானால் நான் காசி, கங்கை, இராமேஸ்வரம், சேது முதலிய தீர்த்தங்களில் மூழ்கித் தீர்த்தப் பலனை அடைய முடியாமற்போகுமே, அதற்கு என்ன செய்வது" என்று வேண்ட, இறைவன் மூக்கூடல் தீர்த்தத்தை உண்டாக்கி அதில் மூழ்குமாறு பணிக்க ஜடாயுவும் அவ்வாறே மூழ்கிப் பலனைப் பெற்றது. இவ்வரலாற்றை யொட்டித்தான் மக்கள் பேச்சு வழக்கில் இப்பகுதியை "குருவிராமேஸ்வரம்" என்று கூறுகின்றனர்.
ஆராத இன்னமுதை அம்மான் தன்னை அயனொடுமா லறியாத ஆதி யானைத் தாராரும் மலர்க்கொன்றைச் சடையான் தன்னைச் சங்கரனைத் தன்னொப்பா ரில்லா தானை நீரானைக் காற்றானைத் தீயா னானை நீள்விசும்பாய் ஆழ்கடல்க ளேழுஞ் சூழ்ந்த பாரானைப் பள்ளியின்முக் கூட லானைப் பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.
- திருநாவுக்கரசர்



கருத்துகள்