இது தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் 205வது ஸ்தலமாகும், சோழ நாட்டில் காவேரி நதியின் தெற்கு கரையில் அமைந்த 88வது ஸ்தலமாகும்.
இறைவன்: அரநெறியப்பர், அசலேசுவரர்.
இறைவி: வண்டார்குழலி.
இக்கோயில் திருவாரூர்க் கோயிலுக்குள்ளேய தெற்குச் சுற்றில் உள்ளது; இக்கோயில் அசலேச்சரம் என்று வழங்கப்படுகிறது.
63 நாயன்மார்களில் ஒருவரான நமிநந்தி அடிகள் இக்கோவிலில் சிவலிங்க வழிபாடு செய்து வந்தார். திருவாரூரில் பிறந்தவர்களை எல்லாம் சிவரூபமாக கருதியவர் இவர். ஒருமுறை அரநெறியப்பர் கோயிலுக்கு மாலை வேளையில் வழிபாடு செய்ய வந்த நமிநந்தி அடிகள், கோயில் விளக்குகளில் உள்ள நெய் தீர்ந்து போகும் நிலை ஏற்பட்டு விளக்கின் ஒளி மங்க்த் தொடங்கியது. தொலைவிலுள்ள தமது வீட்டிற்கு சென்று நெய் வாங்கி வருவதற்குள் நன்றாக இருட்டிவிடும், விளக்கும் அதற்குள் அணைந்துவிடும் என்று நினைத்த நமியந்தி அடிகள் கோயில் வாசலில் இருந்த வீட்டிற்கு சென்று விளக்கிற்காக சிறிது நெய் கேட்டார். அந்தக்காலத்தில் கோயிலை சுற்றி சமணர்கள் அதிகம் வசித்து வந்தனர். இவர் நெய் கேட்ட விட்டில் சமணர்கள் வாழ்ந்து வந்தனர். "கையில் தீ ஏந்தி நடனம் செய்யும் உங்கள் இறைவனுக்கு விளக்கு தனியாக தேவையில்லை, அப்படியும் நீ விளக்கு ஏற்ற வேண்டுமானால், கோயில் எதிரில் உள்ள குளத்து நீரை எடுத்து தீபத்தை ஏற்று" என்று சமணர்கள் பரிகாசம் செய்தனர். இதனால் வருத்தமடைந்த அடிகள் கோயிலுக்கு வந்து இறைவனிடம் மனமுருகி வேண்ட இறைவன் அசரீரியாக "அவர்கள் கூறியபடி இங்குள்ள குளத்து நீரை எடுத்து எனது சன்னதியில் விளக்கேற்று"' என்று கூறினார். இதைக்கேட்ட நமிநந்தி அடிகள் மிகுந்த சந்தோஷத்துடன் சங்கு தீர்த்தம் எனப்படும் குளத்திலிருந்த நீரை எடுத்து வந்து விளக்கில் ஊற்றி தீபத்தை தூண்டிவிட்டார். தீபம் முன்பை விட பலமடங்கு பிரகாசமாக எரிந்தது. அத்துடன் அங்கிருந்த பல விளக்குகளிலும் நீரை ஊற்றி தீபம் ஏற்றினார். சிவபெருமானின் அருளால் தண்ணீரால் கோவில் விளக்கெல்லாம் எரியச் செய்து, சமணர்களின் கொட்டத்தை அடக்கி இறைவனின் பெருமையை உலகறியச் செய்தார்.
எத்தீ புகினும் எமக்குஒரு தீதுஇலை தெத்தே எனமுரன்று எம்முன் உழிதர்வர் முத்தீ யனையதொர் மூவிலை வேல்பிடித்து அத்தீ நிறத்தார் அரநெறி யாரே
- திருநாவுக்கரசர்
கருத்துகள்