இது தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் 207வது ஸ்தலமாகும், சோழ நாட்டில் காவேரி நதியின் தெற்கு கரையில் அமைந்த 90வது ஸ்தலமாகும்.
இறைவி: யாழினும் மென்மொழியம்மை, மதுரபாஷினி.
சிவபெருமானின் ஆடலை தினமும் கண்டு அவரது திருவடியிலேயே இருப்பவர் பதஞ்சலி முனிவர். அவர் தினமும் நடராஜப் பெருமானின் நடனத்தைக் கண்டபின்தான் உணவு உட்கொள்வார். இறைவனுக்கு தினமும் மரத்தில் ஏறிப் பூ பறிப்பதற்காக புலியின் கால்களை வேண்டி வரமாகப் பெற்ற வியாக்ரபாத முனிவரும், பதஞ்சலி முனிவரும் இறைவனின் அஜபா நடனத்தையும், ருத்ர தாண்டவத்தையும் என்றென்றும் காண வேண்டி வழிபட்டனர். மேலும் திருவடி தரிசனத்தை காண்பித்து அருள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இவர்கள் இருவருக்கும் இத்தலத்தில் சிவபெருமான் தனது திருப்பாதம் காட்டி நடனம் ஆடியருளினார். இந்த தரிசனத்தை விஷ்ணு, பிரம்மா, முசுகுந்த சக்கரவர்த்தி மற்றும் தேவாதி தேவர்கள் கண்டு களித்தனர். சிவபெருமான் காட்டிய ருத்ரபாதத்திற்கு இன்றளவும் தினமும் பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. எனவே இத்தலம் திருவடி க்ஷேத்திரம் என்றும், சிவபாத ஸ்தலம் என்றும் போற்றப்படுகிறது.
மத்தகம் அணிபெற மலர்வதொர் மதிபுரை நுதல்கரம் ஒத்தக நகமணி மிளிர்வதொர் அரவினர் ஒளிகிளர் அத்தக வடிதொழ அருள்பெரு கண்ணொடும் உமையவன் வித்தகர் உறைவது விரிபொழில் வளநகர் விளமரே.
- திருஞானசம்பந்தர்
கருத்துகள்