196. திருப்பூவனூர்

இது தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் 220வது ஸ்தலமாகும், சோழ நாட்டில் காவேரி நதியின் தெற்கு கரையில் அமைந்த 103வது ஸ்தலமாகும். 

இறைவன்: புஷ்பவன நாதர், சதுரங்கவல்லபநாதர்.  

இறைவி: கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி.







தெண்பாண்டி நாட்டு அரசன் வசுசேனன் அவன் மனைவி காந்திமதி ஆகியோருக்கு வெகு காலமாக குழந்தை இல்லை. நீண்ட நாட்களாக அவர்கள் சிவபெருமானை வழிபட்டு வந்தனர். அரசன் ஒருநாள் நீராடிய குளத்தில் ஒரு தாமரை மலரில் ஒரு சங்கைக் கண்டான். இறைவன் திருவருளால் உமாதேவியே அவர்களுக்கு மகளாகப் பிறக்க அங்கு சங்கு ரூபத்தில் தென்பட அரசன் அச்சங்கை கையில் எடுத்தவுடன் அது ஒரு அழகிய பெண் குழந்தையாக உருவெடுக்கக் கண்டு மிகவும் மனம் மகிழ்ந்து அக்குழந்தைக்கு ராஜராஜேஸ்வரி என்று பெயரிட்டு அருமை பெருமையுடன் வளர்த்து வந்தான். ராஜராஜேஸ்வரி சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்று வளர்ந்தாள். குறிப்பாக சதுரங்க விளையாட்டில் மிகவும் புகழ் பெற்று எல்லோரையும் வென்று விளங்கினாள். 

அரசன் மகளுக்கு மணம் முடிக்க வேண்டி, தகுந்த வரன் அமைய வேண்டும் என்ற நோக்கில் மகளை சதுரங்க விளையாட்டில் வெல்பவருக்கே மணமுடிப்பது என்று தீர்மானித்தான். பல அரசகுமாரர்கள் வந்தனர். அனைவரும் சதுரங்க ஆட்டத்தில் அவளிடம் தோற்றுப் போனார்கள். மன்னன் யாராலும் மகளை வெல்ல முடியவில்லையே என்று வருத்தப்பட்டு, தலயாத்திரை மகளுடன் கிளம்பிச் சென்றான். அநேக சிவஸ்தலங்களை தரிசித்துவிட்டு திருப்பூவனூர் வந்து சேர்ந்தான். இறைவன் புஷ்பவனநாதரை வழிபட்டு கவலையுடன் தன் இருப்பிடம் திரும்பினான். மறுநாள் காலை ஒரு வயோதிகர் அரசனைத் தேடி வந்தார். ராஜராஜேஸ்வரியைப் பார்த்து என்னுடன் சதுரங்கம் ஆடி உன்னால் என்னை வெல்ல முடியுமா என்று கேட்டார். அரசன் மகளும் சம்மதிக்க சதுரங்க ஆட்டம் துவங்கியது. அன்றுவரை இந்த ஆட்டத்தில் தோல்வியே காணாத அவள் அன்று அந்த முதியவரிடம் தோற்றுப் போனாள். அரசன் மகளை ஒருவர் வென்று விட்டாரே என்று சந்தோஷப்பட்டாலும் ஒரு வயோதிகருக்கு தன் வாக்குப்படி மகளை மண்முடிக்க வேண்டுமே என்று கவலைப்பட்டான். உள்ளம் உருக சிவபெருமானை தியானித்தான். கண் சிமிட்டும் நேரத்தில் அங்குள்ள முதியவர் மறைந்து அங்கே சிவபெருமான் நிற்கக் கண்டான். சதுரங்க ஆட்டத்தில் ராஜராஜேஸ்வரியை வென்று அவளுக்கு மாலையிட்டவர் புஷ்பவனநாதரே ஆவார். சதுரங்க ஆட்டத்தில் இறைவியை வென்றதால் சதுரங்கவல்லபநாதர் என்ற பெயரும் பெற்றார்.

பூவ னூர்ப்புனி தன்திரு நாமம் தான்
நாவில் நூறுநூ றாயிரம் நண்ணினார்
பாவ மாயின பாறிப் பறையவே
தேவர் கோவினும் செல்வர்கள் ஆவரே
- திருநாவுக்கரசர் 

கருத்துகள்