199. தருமபுரம்

இது 168வது தேவார பாடல் பெற்ற சிவ தலம் மற்றும்  சோழநாட்டில் காவிரி ஆற்றின் தென்கரையில் உள்ள மற்றும் 51வது தலமாகும்.  

இறைவன்:  யாழ்முறிநாதர், தர்மபுரீஸ்வரர்.

இறைவி:  மதுர மின்னம்மை, தேனமிர்தவல்லி.





மார்க்கண்டேயரின் உயிரைப் பறிக்க வந்த எமதர்மனை சிவபெருமான் திருக்கடையூரில் சம்ஹாரம் செய்து அவரது பதவியையும் பறித்தார். இதனால் பூலோகத்தில் உயிர்கள் மரணமின்றி பல்கிப் பெருகின.  பாரம் தாங்காத பூமாதேவி சிவபெருமானிடம் வேண்ட, சிவபெருமானும் எமதர்மனை உயிர்ப்பித்து, பூலோகத்தில் தவமிருந்து தன்னை வழிபட்டு வந்தால் இழந்த பதவியை மீண்டும் பெறலாம் என வரமளித்தார். அதன்படி இத்தலம் வந்த எமதர்மன்  (தருமன் - தருமராஜா), தவமிருந்து சிவனை வழிபட, இறைவன் அவருக்கு காட்சி தந்து இழந்த பதவியை அவருக்கு மீண்டும் கிடைக்கச் செய்தார். 

எருக்கத்தம்புலியூர் எனும் ஊரில் வசித்த நீலகண்ட யாழ்ப்பாண நாயனார் சிவன் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். திருஞானசம்பந்தரின் சிவ பணியை அறிந்த நீலகண்ட யாழ்ப்பாண நாயன்மாரும், அவரது மனைவி மதங்கசூளாமணியும் அவருடன் இணைந்து சிவத்தலயாத்திரை மேற்கொண்டனர். திருஞானசம்பந்தர் பதிகம் பாட அதற்கேற்ப யாழ்ப்பாணர் இசையமைப்பார். சம்பந்தர் பாடும் அனைத்து பாடல்களுக்கும் இனிமையாக யாழ்  இசைக்கும் திறமை பெற்றிருந்ததால் யாழ்ப்பாணர் சற்று கர்வம் கொண்டார். அவரது கர்வத்தை அடக்க சிவன் எண்ணம் கொண்டார். திருநீலகண்ட யாழ்ப்பாணரது தாயார் பிறந்த இடமாதலின், ஒரு சமயம் அவர்கள் இத்தலத்திற்கு வந்தபோது, திருஞானசம்பந்தரும் "மாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர்" என்று தொடங்கும் பதிகம் பாடினார். திருஞான சம்பந்தரின் இசை திருநீலகண்ட யாழ்ப்பாணரின் யாழிசையில் அடங்காமல் போக கலங்கிய யாழ்ப்பாணர் கலையில் தான் தோற்றுவிட்டதாக கருதி யாழை முறித்து, தன் உயிரை விடச் சென்றார். அப்போது சிவன் அவருக்கு காட்சி தந்து யாழை வாங்கி, சம்பந்தரின் பதிகத்திற்கேற்ப வாசித்து, நடனம் ஆடினார். தன் நிலை உணர்ந்த யாழ்ப்பாணர் கர்வம் நீங்கப்பெற்றார்.

யாழை இசைத்து, யாழ்ப்பாணரின் கர்வத்தை அடக்கியவர் என்பதால் இத்தலத்து சிவன் யாழ்முறிநாதர் என அழைக்கப்படுகிறார். 
 மாதர் மடப்பிடியும் மட அன்னமும் அன்னதோர்
            நடையுடைம் மலைமகள் துணையென மகிழ்வர்
பூதஇனப்படை நின்றிசை பாடவும் ஆடுவர்
            அவர்படர் சடைந் நெடு முடியதொர் புனலர்
வேதமொடு ஏழிசைபாடுவார் ஆழ்கடல் வெண்டிரை
            யிரைந் நுரை கரை பொருது விம்மி நின்றயலே
தாதவிழ் புன்னை தயங்கு மலர்ச் சிறை வண்டறை
            பெழில் பொழில் குயில் பயில் தருமபுரம் பதியே.
- திருஞானசம்பந்தர்

கருத்துகள்