207. திருமாந்துறை

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில்  112 ஆவது தலமும், சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் 58ஆவது சிவத்தலமாகும். 

இறைவன் :  ஆம்ரவனேஸ்வரர், மிருகண்டீஸ்வரர்.  

இறைவி :  அழகம்மை, பாலாம்பிகை.







இவ்வனத்தில் தவம் செய்த மகரிஷி ஒருவர் சிவ அபச்சாரம் செய்ததால் மானாக பிறக்கும்படி சாபம் பெற்றார். அவர் இவ்வனத்திலேயே, தங்களின் முற்பிறவியில் செய்த பாவத்தால் மான்களாக பிறந்த அசுரகுல தம்பதியர்களுக்கு பிறந்தார். ஒருநாள் குட்டி மானை விட்டுவிட்டு, தாய் மானும், தந்தை மானும் வெளியே சென்றுவிட்டன. அவை இரைதேட சென்ற இடத்தில் வேடுவ தம்பதி வடிவில் வந்த சிவனும், பார்வதியும் அவற்றை அம்பால் வீழ்த்தி சாபவிமோசனம் தந்தனர். இரவு நெடுநேரம் ஆகியும் தாய் மான் இருப்பிடத்திற்கு திரும்பாததால் கலங்கிய குட்டிமான் கண்ணீருடன் காத்துக் கொண்டிருந்தது. நேரம் ஆக, ஆக மானுக்கு பசியெடுக்கவே அது அலறியது. சிவனும், பார்வதியும் அதனைப் பெற்ற மான் வடிவில் இங்கு வந்தனர். பசியால் வாடியிருந்த குட்டி மானுக்கு பார்வதி தேவி பால் புகட்டினார். தந்தை வடிவில் வந்த சிவன் அதனை ஆற்றுப்படுத்தினார். சிவன், பார்வதியின் தரிசனம் பெற்ற குட்டி மான் தன் சாபத்திற்கு விமோசனம் பெற்று மீண்டும் மகரிஷியாக மாறியது. அவரது வேண்டுதலுக்காக சிவன் இத்தலத்தில் சுயம்புவாக எழுந்தருளினார். பார்வதிதேவியும் இங்கேயே தங்கினாள். கோவில் நுழைவு வாயிலில் மேலே இறைவன் மான்குட்டித் தாயாக வந்த வரலாறு சுதை சிற்பமாகக் காட்சியளிக்கிறது. மானுக்கு அருள் புரிந்த சிவதலம் என்பதாலும் இத்தலம் மாந்துறை என வழங்கப்படுகிறது.
செம்பொன் ஆர்தரு வேங்கையும் ஞாழலும்  செருந்தி செண்பகம் ஆனைக்
கொம்பும் ஆரமும் மாதவி சுரபுனை குருந்தலர் பரந்துந்தி
அம்பொ னேர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைகின்ற
எம்பி ரான்இமை யோர்தொழு பைங்கழல் ஏத்துதல் செய்வோமே
- திருஞானசம்பந்தர்

கருத்துகள்