தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 115 ஆவது தலமும், சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் 61ஆவது சிவத்தலமாகும்.
இறைவன் : நீலகண்டேஸ்வரர், ஞீலிவனநாதர், கதலிவசந்தர், ஆரண்யவிடங்கர்.
இறைவி : அழகம்மை, பாலாம்பிகை.
திருக்கடவூர் தலத்தில் மார்க்கண்டேயனுக்காக எமனை காலால் உதைத்து சம்ஹாரம் செய்தார் சிவபெருமான். இதனால் உலகில் இறப்பு என்பதே இல்லாமல் போக பூமியின் பாரம் அதிகரித்தது. பாரம் தாங்காத பூமிதேவி சிவபெருமானிடம் முறையிட்டாள். மற்ற தேவர்களும் சிவனிடம் எமனை உயிர்ப்பித்துத் தருமாறு முறையிட்டனர். சிவபெருமான் அதற்கிணங்கி எமனை இத்தலத்தில் தன் பாதத்தின் அடியில் குழந்தை உருவில் எழும்படி செய்து தர்மம் தவறாமல் நடந்து கொள்ளும்படி அறிவுரை கூறி மீண்டும் தன் பணியை செய்து வரும்படி அருள் செய்தார்.
திருநாவுக்கரசருக்கு இறைவன் பொதிசோறு கொடுத்தருளிய தலம் திருப்பைஞ்சீலி ஆகும். திருச்சிராப்பள்ளி, திருக்கற்குடி, திருப்பராய்த்துறை ஆகிய சிவஸ்தலங்களை தரிசித்துவிட்டு திருநாவுக்கரசர் திருப்பைஞ்சீலி நோக்கி சென்று கொண்டிருந்தார். வழியில் நீர்வேட்கையும், பசியும் அவரை வாட்டின. எனினும் மனம் தளராமல் திருப்பைஞ்சீலி நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் களைப்பைப் போக்க இறைவன் எண்ணினார். அவர் வரும் வழியில் ஒரு குளமும் தங்கி இளைப்பாறும் மண்டபமும் உருவாக்கி கூட்டுச்சோறு வைத்துக் கொண்டு முதிய அந்தணர் உருவத்தில் இறைவன் காத்துக் கொண்டிருந்தார். களைத்து வந்த அப்பருக்கு தன்னிடம் உள்ள பொதிச்சோற்றை உண்டு குளத்து நீரைப் பருகியும் மேலே செல்லும்படி வற்புறத்தினார். அப்பரும் ஒன்றும் கூறாமல் உண்டு களைப்பாறினார். அந்தணரை நீர் எங்கு செல்கிறீர் என்ரு அப்பர் கேட்டதற்கு தானும் திருப்பைஞ்சீலி செல்வதாக இறைவன் கூற இருவரும் பேசிக்கொண்டே சென்றனர். திருப்பைஞ்சீலி ஆலயம் அருகே வந்தவுடன் அந்தணர் மாயமாய் மறைந்துவிட்டார். அப்போது தான் இறைவனே அந்தணராக வந்து தனக்கு உணவு அளித்ததை அப்பர் புரிந்து கொண்டார்.
ஆரிடம் பாடிலர் அடிகள் காடலால் ஓரிடம் குறைவிலர் உடையார் கோவணம் நீரிடம் சடைவிடை யூர்தி நித்தலும் பாரிடம் பணிசெயும் பயில்பைஞ் ஞீலியே.
உடையர் கோவணம் ஒன்றும் குறைவிலர் படைகொள் பாரிடம் சூழ்ந்தபைஞ் ஞீலியார் சடையிற் கங்கை தரித்த சதுரரை அடைய வல்லவர்க்கு இல்லை அவலமே.
மத்த மாமலர்க் கொன்றை வன்னியும் கங்கை யாளொடு திங்களும் மொத்த வெண்டலை கொக்கி றஃகொடு வெள்ளெ ருக்கமுஞ் சடையதாம் பத்தர் சித்தர்கள் பாடி ஆடும் பைஞ் ஞீலி யேனென்று நிற்றிரால் அத்தி யீருரி போர்த்தி ரோசொலும் ஆர ணீய விடங்கரே.

கருத்துகள்