தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 243 ஆவது தலமும், சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 126ஆவது சிவத்தலமாகும்.
இறைவன் : அகத்தீஸ்வரர்.
இறைவி : பாகம்பிரியாள், மங்கைநாயகி அம்மை, சௌந்தரநாயகி.
சிவன் பார்வதி திருமணம் காண தேவர்கள், முனிவர்கள் மற்றும் எல்லோரும் கைலாயத்தில் கூடினர். அப்போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. எனவே பூமியை சமன் செய்ய இறைவன் அகத்திய முனிவரை தென்திசை செல்லும்படி பணித்தார். அகத்தியர் தனக்கு சிவன் பார்வதி திருமணத்தைக் காணும் பேறு கிடைக்கவில்லையே என்று வருந்தினார். சிவபெருமான் அகத்தியருக்கு திருமணக் கோலம் காட்டி அருளுவேன் என்று வாக்களித்தார். அகத்தியரும் புறப்பட்டு தென்திசை வந்து அகத்தியான்பள்ளி தலத்தில் ஒரு ஆசிரமம் அமைத்துக் கொண்டு தங்கினார். சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து அதற்கு பூஜைகள் செய்து வரலானார். இறைவன் அகத்தியருக்கு கொடுத்த வாக்கின் படி பார்வதியுடன் நடந்த தனது திருமணக் கோலத்தை அருகிலுள்ள திருமறைக்காடு தலத்தில் காட்டி அருள் புரிந்தார். அகத்தியர் இத்தலத்தில் இறைவனை பூஜித்ததால் இத்தலத்து இறைவன் அகத்தீஸ்வரர் எனப்படுகிறார்.
வாடிய வெண்டலை மாலைசூடி மயங்கிருள் நீடுயர் கொள்ளி விளக்குமாக நிவந்தெரி ஆடிய எம்பெருமான் அகத்தியான் பள்ளியை பாடிய சிந்தையினார்கட்கு இல்லையாம் பாவமே.
- திருஞானசம்பந்தர்


கருத்துகள்