212. திருவிளநகர்

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில்  157 ஆவது தலமும், சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் 40ஆவது சிவத்தலமாகும். 

இறைவன்:  துறைகாட்டும் வள்ளல், உச்சிவனேஸ்வரர்.

இறைவி:  வேயுறுதோளி







முன்னொரு காலத்தில் அருள்வித்தன் என்னும் அந்தணன் இத்தல இறைவன் மீது அளவில்லாத பக்தி கொண்டிருந்தான். நாள் தோறும் இறைவனுக்கு மாலை கட்டிக் கொடுக்கும் தொண்டினைச் செய்து வந்தான். இவனது பக்தியை சோதிக்க விரும்பினார் இறைவன். ஒருநாள் இவன் பூக்கூடையுடன் ஆற்றைக்கடந்து வரும்போது ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்படி செய்தார். இதனால் கலங்கிய இவன் தன்னைப்பற்றி கவலைப்படாமல் இறைவனுக்குரிய பூக்கூடையை காப்பாற்றுவதில் மிகவும் கவனமாக இருந்தான். தலையளவு வெள்ளம் வந்துவிட்ட போதிலும் தன் கைகளால் பூக்கூடையை தலைக்கு மேல் தூக்கிப் பிடித்துக் கொண்டு தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல் இறைவனுக்கு செய்யும் தொண்டில் பங்கம் வந்துவிடக் கூடாதே என்று கவலைப்பட்டான். அவனுடைய உறுதியையும், அன்பையும் கண்ட இறைவன் அவனுக்கு அருள் சொரிந்து ஆற்றின் துறையைக் காட்டி அவனைக் கரையேறச் செய்தார். இதனால் இறைவன் "துறை காட்டும் வள்ளல்" ஆனார்.

“கடைமுடி” சிவனை வழிபட்ட பிறகு, திருஞானசம்பந்தர் இந்த இடத்திற்கு வந்தார். அந்த நேரத்தில், நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதைக் கடக்க முடியவில்லை.  சம்பந்தர் ஒருமுறை இத்தலத்திற்கு விஜயம் செய்ய வந்தபோது காவிரி ஆறு கரைபுரண்டு ஓடுவதைப் பார்த்து கரையிலேயே நின்று பரிதவித்தார். “துறை காட்டுவர் எவரெனும் உலரோ- துறை காட்டுவர் எவரேனும் உளரோ” என்று துரையைக் காட்டுமாறு பிரார்த்தனை செய்தார். சிவபெருமான் வேட்டைக்காரன் வடிவில் அவர் முன் தோன்றி திருஞானசம்பந்தரை பின்தொடர்ந்து வரும்படி சொல்லி ஆற்றில் இறங்கினான். சம்பந்தரும் அவனைப் பின்தொடர்ந்து ஆற்றில் இறங்க ஆற்றின் நீர் அதிசயமாக அவரது பாத மட்டத்திற்குக் குறைந்தது. மறுகரை சேர்ந்த சம்பந்தர் நன்றி சொல்ல வேடனைத் தேட அவன் மாயமாய் மறைந்து விட்டதைக் கண்டார். இறைவனே வேடனாய் வந்து துறை காட்டியதால் அவர் துறை காட்டும் வள்ளலார் என்று அழைக்கப்படுகிறார்.
ஒளிர் இளம்பிறை சென்னிமேல் உடையவர்கோவண ஆடையர்
குளிர் இளம்மழை தவம்பொழில் கோலநீர்மல்கு காவிரி
நளிர் இளம்புனல் வார்துறை நங்கைகங்கையை நண்ணினார்
மிளிர் இளம்பொறி அரவினார் மேயது விள நகரதே
- திருஞானசம்பந்தர்

கருத்துகள்