214. திருக்கடவூர் மயானம் (திருமெய்ஞ்ஞானம்)

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில்  166 ஆவது தலமும், சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் 49ஆவது சிவத்தலமாகும். 

இறைவன்:  பிரம்மபுரீஸ்வரர்.

இறைவி:  மலர்க்குழல் மின்னம்மை.








சைவ சமயத்தில் ஜந்து தலங்கள் மயானம் என்று அழைக்கப்படுகின்றன. அவை காசி மயானம், கச்சி மயானம் (காஞ்சீபுரம்), காழி மயானம் (சீர்காழி), நாலூர் மயானம் மற்றும் கடவூர் மயானம் ஆகும். மயானம் எனபது சிவபெருமான் பிரம்மதேவரை எரித்து நீராக்கிவிட்ட இடமாகும்.  ஒரு பிரம்ம கல்பத்தின்  முடிவில் சிவபெருமான் பிரம்மாவை எரித்து நீராக்கிவிட்டார். அவ்வாறு பிரம்மா சிவபெருமானால் எரிக்கப்பட்ட இடமே திருக்கடவூர் மயானம். தேவர்கள் யாவரும் ஒன்று கூடி திருக்கடவூர் மயானம் வந்து பிரம்ம தேவருக்கு மீண்டும் உயிர் வழங்க வேண்டி தவம் செய்தனர்.  இறைவன் அதற்கிணங்கி இத்தலத்தில் பிரம்மாவை உயிர்ப்பித்து அவருக்கு சிவஞானத்தை போதித்து படைக்கும் ஆற்றலை மீண்டும் வழங்கினார். பிரம்மா சிவஞானம் உணர்ந்த இடம் திருக்கடவூர் மயானம். ஆகவே இத்தலம் திருமெய்ஞானம் என்றும் அழைக்கப்படுகிறது.

ஒரு கல்பம் என்பது பிரம்மாவின் ஒரு நாள், பிரம்மாவின் ஒரு நாள் என்பது சத்ய யுகம், த்ரேதா யுகம், துவாபர யுகம் மற்றும் கலியுகம் ஆகிய நான்கு யுகங்களைக் கொண்ட ஆயிரம் சுழற்சிகளைக் உள்ளடக்கியது. இந்த நான்கு யுகங்களும் சேர்ந்து பிரம்மாவின் ஒரு நாளை உள்ளடக்கியது (சதுர யுகம்), அதே எண்ணிக்கை ஒரு இரவைக் கொண்டுள்ளது. பிரம்மா இதுபோன்ற நூறு "ஆண்டுகள்" வாழ்ந்து பின்னர் இறக்கிறார். இந்த "நூறு ஆண்டுகள்" மொத்தம் 311 டிரில்லியன் 40 பில்லியன் (311,040,000,000,000) பூமி ஆண்டுகள். பிரம்மாவின் ஆயுட்காலம் 311.04 டிரில்லியன் சூரிய ஆண்டுகள்.

ஒரு சதுர யுகம் என்பது 4.32 மில்லியன் ஆண்டுகள் (12000 தேவ வருடம்) கொண்டது.  360 சூரிய ஆண்டுகள் ஒரு தேவ ஆண்டாகும். 

சத்ய யுகம் 1.728 மில்லியன் ஆண்டுகள் (4800 தேவ வருடம்) கொண்டது.
திரேதா யுகம் 1.296 மில்லியன் ஆண்டுகள் (3600 தேவ வருடம்) கொண்டது.
துவாபர யுகம் 864,000 ஆண்டுகள் (2400 தேவ வருடம்) கொண்டது.
கலியுகம் 432,000 ஆண்டுகள் (1200 தேவ வருடம்) கொண்டது.
வரியமறையார் பிறையார் மலையோர் சிலையா வணங்கி
எரிய மதிகள் எய்தார் எறியும் ஊசலம் உடையார்
கரிய மிடறும் உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்
பெரிய விடைமேல் வருவார் அவர் எம்பெருமான் அடிகளே.
- திருஞானசம்பந்தர்

குழைகொள் காதினர்கோவண ஆடையர்
உழையர் தாம் கட வூரின் மயானத்தார்
பழைய தம்அடி யார்செய்த பாவமும்
பிழையும் தீர்ப்பர் பெருமான் அடிகளே.
- திருநாவுக்கரசர்

மருவார் கொன்றை மதிசூடி மாணிக் கத்தின் மலைபோல
வருவார் விடைமேல் மாதோடு மகிழ்ந்து பூதப் படைசூழத்
திருமால் பிரமன் இந்திரற்கும் தேவர் நகர் தானவர்க்கும்
பெருமான் கடவூர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே. 
- சுந்தரர்

கருத்துகள்