217. திருவலம்புரம் (மேலப்பெரும்பள்ளம்)

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில்  161ஆவது தலமும், சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 44ஆவது சிவ தலமாகும்.  இங்குள்ள சுயம்பு லிங்கத்தின் மேல் பகுதியில் ஒரு கை நுழையும் அளவிற்கு இரு பள்ளங்கள் உள்ளது. இதனால் இத்தலம் "மேலப்பெரும்பள்ளம்" என்று கூறுகிறார்கள்.

இறைவன்:  வலம்புரநாதர்.

இறைவி:  வடுவகிர்க்கண்ணி




மகாவிஷ்ணு சிவனைக் குறித்து தவம் செய்யப் போன போது, திருமகளை இத்தலத்து அம்பிகையின் தோழியாக விட்டு சென்றார். தவத்தின் பலனாக மகாவிஷ்ணு சிவபெருமானிடமிருந்து சக்ராயுதமும், கதையும் பெற்றார். அதன் பின் இங்கு வந்து அம்மனை வணங்கி சங்கும், பத்மமும் பெற்றார் என்று தல வரலாறு கூறுகிறது.






காவிரியில் இருந்து வெளிப்பட்ட ஆதிசேஷனால் ஒரு பெரிய பிலத்துவாரம் (பள்ளம்) திருவலஞ்சுழி தலத்தில் ஏற்பட்டது. பாய்ந்து வந்த காவிரியாறு ஆதிசேஷன் வெளிப்பட்ட பள்ளத்தில் பாய்ந்து பாதாளத்தில் இறங்கிவிட்டது. சோழ மன்னர் மிகவும் கவலைப்பட்டு சிவபெருமானை பிரார்த்தனை செய்தார். சிவபெருமான், ஒரு தெய்வீக குரல்/அசரிரி வடிவத்தில், ராஜா அல்லது ஒரு மகரிஷி துளைக்குள் சென்று தங்கள் உயிரைக் கொடுப்பார்கள், மேலும் காவிரி வழக்கமான பாதையில் ஓடும் என்று  கூறினார்.  சோழ மன்னர் ஹரித்துவஜன் கோட்டையூருக்குச் சென்றார், அங்கு முனிவர் எரண்ட மகரிஷி ஒரு எரண்டம் செடியின் கீழ் தவம் செய்து கொண்டிருந்தார். மன்னர் பிரச்சினையைச் சொல்லி அவரது ஆலோசனையைப் பெற்றார். எரண்ட மகரிஷி திருவலஞ்சுழியில் அந்த பிலத்துவாரத்தில் இறங்கி தன்னை பலி கொடுத்து காவிரியை மீண்டும் வெளிக் கொண்டுவந்த பிறகு வலமாக வந்து இத்தலத்தில் கரையேறினார். அதனால் இத்தலம் "திருவலம்புரம்" ஆனது. 


அரசன் ஒருவன் வேட்டைக்குச் சென்றான். விளையாட்டுக்காகத் தான் இறந்து விட்டதாக அமைச்சர் மூலம் பொய்ச் செய்தி சொல்லியனுப்பினான். அச்செய்தி கேட்ட அரசி அதிர்ச்சியுற்று இறந்தாள். மன்னனைப் பழி சூழ்ந்தது. பழி நீங்க சான்றோர்களிடம் ஆலோசனை கேட்டான். அவர்களும் நாடொறும் ஆயிரம் பேருக்கு உணவளித்தால் அதில் எவரேனும் மகான் ஒருவர் வந்து உணவுண்டால் அரண்மனை வாயிலில் உள்ள மணி ஒலிக்கும், அப்போது பழிதீரும் என்று மன்னனுக்குச் சொல்லினர். அது கேட்ட மன்னனும் அவ்வாறே செய்து வந்தான்.  ஒரு முறை அன்னதானம் நடந்து கொண்டிருந்த போது, அசரீரி தோன்றி, "அன்னதானம் நடக்கும் இக்கோயிலில் நீண்ட காலமாக ஒலிக்காத மணி, தானே ஒலிக்கும். அப்போது மன்னனின் தோஷம் விலகும்" என கூறியது. அன்னதானம் தொடர்ந்து நடந்து வர, பட்டினத்தார் ஒரு முறை இக்கோயிலுக்கு அன்னதானம் நடக்கும் நேரம் வந்தார். பசியோடு இருந்த அவர், மடப்பள்ளியில் இருந்தவரிடம் தனக்கு உணவு தருமாறு கேட்டார். அவர் உணவு தர மறுக்கவே, மடப்பள்ளியின் பின் பக்கம் வழிந்தோடும் கஞ்சியை இருகைகளால் அள்ளி குடித்து பசியாறியதாகவும், உடனே இதுநாள் வரை அடிக்காமல் இருந்த மணியானது தானே ஒலிக்க ஆரம்பித்ததாகவும், அன்னதானமே இன்னும் ஆரம்பிக்க வில்லை, அதற்குள் மணி ஒலித்து விட்டதே என அனைவரும் ஆச்சரியமடைந்து போய் பார்த்தபோது அங்கே பட்டினத்தடிகளை அனைவரும் தரிசித்தனர். உடனே மன்னனின் தோஷம் விலகியது. 
கொடியுடை மும்மதில் ஊடுருவக் குனிவெஞ்சிலை தாங்கி
இடிபட எய்த அமரர் பிரான் அடியார் இசைந்து ஏத்தத்
துடிஇடை யாளையொர் பாகமாகத் துதைந்தார் இடம் போலும்
வடிவுடை மேதி வயல்படியும் வலம்புர நன்னகரானே. 
- திருஞானசம்பந்தர்

தெண்டிரை தேங்கி யோதம் சென்றடி வீழுங் காலைத்
தொண்டிரைத் தண்டர்கோனைத் தொழுதடி வணங்கி யெங்கும்
வண்டுகள் மதுக்கண் மாந்தும் வலம்புரத்து அடிகள் தம்மைக்
கொண்டுநற் கீதம் பாடக் குழகர்தாம் இருந்த வாறே.
- திருநாவுக்கரசர்

எனக்கினித் தினைத்தனைப் புகலிடம் அறிந்தேன்
பனைக்கனி பழம்படும் பரவையின் கரைமேல்
எனக்கினி அவன்தமர்க்(கு) இனியவன் எழுமையும்
மனக்கினி அவன்தன(து) இடம்வலம் புரமே. 
- சுந்தரர்

கருத்துகள்